வியாழன், நவம்பர் 12, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

மகளுடன் பழகிய நபரை பட்டன் கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தை கைது – சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

மகளுடன் பழகிய நபரை பட்டன் கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தை கைது – சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை பெரம்பூர் பகுதியில், தனது மகளுடன் பழகி வந்த 33 வயது நபரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக அவரது தந்தை 53 வயதுடைய பாபு என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகளுடனான பழக்கத்தை நிறுத்துமாறு ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில், மீண்டும் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்ததாகக் கூறப்படுகிறது.

 

சென்னை திரு.வி.க. நகர் பகுதியைச் சேர்ந்த காயத்ரி, கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், பெரம்பூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவருடன் அவர் பழகி வந்துள்ளார். இதை அறிந்த காயத்ரியின் தந்தை பாபு, தனது மகளுடன் பழகுவதை நிறுத்திக்கொள்ளுமாறு ரமேஷிடம் ஏற்கனவே கண்டித்துள்ளார்.

 

இதற்கிடையே, கடந்த நவம்பர் 10ஆம் தேதி இரவு பாபு, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள சக்ரபாணி தோட்டம் பகுதியில் அமைந்துள்ள ரமேஷின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு மகளுடன் பழகுவது தொடர்பாக ரமேஷிடம் மீண்டும் கேள்வி எழுப்பியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பாபு மறைத்து வைத்திருந்த பட்டன் கத்தியால் ரமேஷைக் குத்தியதாகவும், இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தச் சம்பவம் குறித்து ரமேஷின் மனைவி ஷர்மிளா அளித்த புகாரின் பேரில், K-1 செம்பியம் காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை திரு.வி.க. நகர் பகுதியைச் சேர்ந்த பாபுவை (53) காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.