தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை! வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழைப்பொழிவு தொடர்ந்து நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் தாக்கத்தால் நவம்பர் 13ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று தமிழகத்தின் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் வட கடலோரப் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




கருத்துகள் (0)