வெள்ளி, அக்டோபர் 16, 2026
உண்மையின் குரல்
இந்தியா

மண்டி பிரியாணி சாப்பிட்ட 19 வயது இளைஞர் உயிரிழப்பு: 19 பேர் மருத்துவமனையில் அனுமதி; உணவகம் மூடல்!

மண்டி பிரியாணி சாப்பிட்ட 19 வயது இளைஞர் உயிரிழப்பு: 19 பேர் மருத்துவமனையில் அனுமதி; உணவகம் மூடல்!

தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டம் நர்சாபூரில் உள்ள ‘ஒன் பேலஸ்’ உணவகத்தில் மண்டி பிரியாணி சாப்பிட்ட 19 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் உணவு சாப்பிட்டவர்களுக்கும் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், 19 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞர் சாய் ராம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நர்சாபூரில் உள்ள ‘ஒன் பேலஸ்’ உணவகத்தில் மண்டி பிரியாணி சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அவருக்கும் உடன் உணவு சாப்பிட்டவர்களுக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சாய் ராம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட மற்ற 19 பேருக்கும் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் தாமோதர் ராஜ நரசிம்ஹா, விரிவான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட ஆய்வில், உணவகம் முறையான உணவுப் பாதுகாப்பு உரிமம் இன்றி இயங்கி வந்ததாகக் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இளைஞரின் உயிரிழப்புக்கும் மற்றவர்களின் உடல்நலப் பாதிப்புக்கும் உணவே காரணமா என்பதை உறுதிப்படுத்த மருத்துவ அறிக்கைகள் மற்றும் உணவகத்திலிருந்து சேகரிக்கப்படும் உணவு மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன. ஆய்வக முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு விதிகளை மீறி பொதுமக்களின் உடல்நலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.