மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் திருப்புமுனை.. கையில் இருந்த டாட்டூ மூலம் சிக்கிய முக்கியக் குற்றவாளி நிஷாந்த்!

மதுரை தனிஷ்க் நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான நிஷாந்தை, அவரது கையில் இருந்த டாட்டூ அடையாளம் காட்டிக் கொடுத்துள்ளது. கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், நகைக்கடையில் பதிவான சிசிடிவி காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்தபோது இந்த முக்கியத் தடயம் கிடைத்துள்ளது.
கொள்ளை நடைபெறுவதற்கு முன்பு வாடிக்கையாளரைப் போல கையில் கட்டுடன் நகைக்கடைக்கு வந்த காட்சி, அதன்பிறகு தொப்பி அணிந்து வந்த காட்சி மற்றும் கொள்ளையின்போது முகமூடி அணிந்திருந்த காட்சி என மூன்று வெவ்வேறு சிசிடிவி பதிவுகளையும் போலீசார் ஒப்பிட்டுப் பார்த்துள்ளனர். அப்போது மூன்று காட்சிகளிலும் ஒரே மாதிரியான டாட்டூ அவரது கையில் இருப்பது தெரியவந்தது.
முகத்தை மறைத்துக் கொண்டு வெவ்வேறு தோற்றங்களில் வந்திருந்தாலும், கையில் இருந்த ஒரே அடையாளம் மூலம் அவர் ஒரே நபர் என்பதை போலீசார் கண்டறிந்தனர். இந்தத் தடயத்தின் அடிப்படையில் விசாரணையைத் தொடர்ந்து மேற்கொண்ட காவல்துறையினர், முக்கியக் குற்றவாளி நிஷாந்தை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை நுணுக்கமாக ஒப்பிட்டுப் பார்த்ததில் கிடைத்த டாட்டூ அடையாளம் இந்த வழக்கின் விசாரணையில் முக்கியத் திருப்பமாக அமைந்துள்ளது.




கருத்துகள் (0)