மிச்சமான உணவை பார்சல் செய்ய ரூ.560 கூடுதல் கட்டணம்! அமெரிக்க உணவகத்தின் ரசீதால் சர்ச்சை!

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் உள்ள சார்லட் நகரில் செயல்பட்டு வரும் 'STATS' உணவகத்தில், சாப்பிட்டு மீதமான உணவை வீட்டிற்கு எடுத்துச் செல்ல விரும்பிய வாடிக்கையாளரிடம் கூடுதலாக 6 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.560) வசூலிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உணவகத்தில் வழங்கப்பட்ட ரசீதில் இந்தக் கூடுதல் கட்டணம் இடம்பெற்றிருந்ததைப் பார்த்த வாடிக்கையாளர், அதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து, மிச்சமான உணவைப் பார்சல் செய்வதற்கே இவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்து, இந்த விவகாரம் இணையத்தில் கவனம் பெற்றது.
இதுகுறித்து விளக்கம் அளித்த உணவக நிர்வாகம், புதன்கிழமைகளில் வழங்கப்படும் பாதி விலை பாஸ்தா சலுகையின் கணக்கீட்டைச் சரிசெய்யும் நோக்கிலேயே அந்தக் கூடுதல் கட்டணம் சேர்க்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. உணவகத்தின் விளக்கத்தைத் தொடர்ந்து இந்தக் கட்டணம் தொடர்பான விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.




கருத்துகள் (0)