ஒருதலைக் காதல் விவகாரம்: கல்லூரி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி – இளைஞர் கைது!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ஒருதலைக் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் கல்லூரி பேருந்தை வழிமறித்த இளைஞர், அதில் பயணம் செய்த மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஸ்ரீகாந்த் என்ற இளைஞரை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், ஸ்ரீகாந்த் தன்னுடன் ஒரே கல்லூரியில் படித்து வரும் மாணவியை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகவும், அவரது காதலை மாணவி ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்து இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவியை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)