தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்.. டிசம்பர் 20-க்குள் நடத்தத் தீவிர ஏற்பாடுகள்? தவெக, திமுக, அதிமுக இடையே கடும் போட்டி.. சீமான் எடுத்த முக்கிய முடிவு!

தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டிசம்பர் 20-க்குள் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ததாலும், அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏக்களின் ராஜினாமாக்களாலும் இந்த 5 தொகுதிகளும் காலியாகின. இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயார்படுத்துதல், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துதல் உள்ளிட்ட தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தவெக தனது அரசியல் பலத்தை நிரூபிக்கத் தயாராகி வருகிறது. அதேபோல், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளும் காலியாக உள்ள தொகுதிகளைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் வியூகங்களை வகுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
திருச்சி கிழக்குத் தொகுதியைத் தவிர மற்ற நான்கு தொகுதிகளிலும் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏக்களான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, ஜெயக்குமார் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற தகவலும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இதற்கிடையே, நாம் தமிழர் கட்சி சார்பில் 5 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமான் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் களத்தில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.
மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியான பிறகே தேர்தல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முழுமையடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை வார்டு மறுவரையறை மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளுக்குப் பிறகு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பின்னர் நடத்துவது குறித்தும் தமிழக அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் என அடுத்தடுத்து தேர்தல் களம் சூடுபிடிக்க உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.




கருத்துகள் (0)