செவ்வாய், நவம்பர் 24, 2026
உண்மையின் குரல்
அரசியல்

தமிழகத்தில் நடப்பது ஆட்சியா? விஜய் அரசுக்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி..

தமிழகத்தில் நடப்பது ஆட்சியா? விஜய் அரசுக்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி..

 

 

மாவட்ட ஆட்சியர் அளித்த புகார் பதிவு செய்யப்படுவது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே தேசிய மகளிர் ஆணையம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதியின் தலையீட்டுக்குப் பிறகுதான் பதிவு செய்யப்படும் என்றால், தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மேலும், பேராசிரியர் ஒருவர் பதிவிடாத கருத்துக்காக அவரது முகவரியைக் கண்டறிந்து அதிகாலையில் அழைத்துச் செல்லத் தெரிந்த காவல்துறைக்கு, முதலமைச்சர் விஜய்யின் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க ஏன் முடியவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

 

தொடர்ந்து, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான கூட்டுப் பாலியல் வன்கொடுமை புகார் மற்றும் மைதானத்தில் போதை மாத்திரையை நசுக்கியதாகக் கூறப்படும் அமைச்சர் தொடர்பான விவகாரங்களையும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய புகார்களில் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கட்சியில் உள்ள மற்றவர்களுக்கும் அச்சம் இருந்திருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

 

மேலும், தவறு செய்தாலும் தங்களைக் காப்பாற்றுவார்கள் என்றும், புகார் அளித்த பெண்கள் மீதே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவறான முன்னுதாரணத்தை முதலமைச்சர் விஜய் அனுமதித்துள்ளதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

 

ஒரு மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அதிகாரியிடமே தவெக சட்டமன்ற உறுப்பினர் எல்லை மீறியுள்ளதாகவும் தனது பதிவில் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

 

மு.க.ஸ்டாலினின் இந்தப் பதிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

 

 

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.