கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ மீது மேலும் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. தண்டனை மற்றும் பதவிக்கு ஏற்படுமா பாதிப்பு?

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜே.இ. பத்மஜா அளித்த புகாரின் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் மீது காவல்துறையினர் கூடுதலாக மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் 75, 79 ஆகிய பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், குற்றத்தின் தன்மையைப் பொறுத்து சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4-ன் கீழ் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் எனக் குறிப்பிடப்படுகிறது.
மேலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 8(3)-ன்படி, இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால் மக்கள் பிரதிநிதியின் பதவித் தகுதிக்கு பாதிப்பு ஏற்படலாம். தண்டனை முடிந்த பிறகும் ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்படலாம்.
இருப்பினும், வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது மட்டுமே எம்.எல்.ஏ பதவியைப் பறிப்பதற்கான காரணமாகாது. காவல்துறை விசாரணை, நீதிமன்ற விசாரணை மற்றும் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில்தான் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் அமையும். இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.




கருத்துகள் (0)