தங்கக் கடன் வாங்கிய 6 மாதங்களுக்குள் மீண்டும் கடன் பெறும் 55% பேர்.. கடன் பொறி அபாயம்!

இந்தியாவில் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, முதல் முறையாக தங்கக் கடன் பெற்றவர்களில் பலர், அந்தக் கடன் பெற்ற ஆறு மாதங்களுக்குள்ளேயே மீண்டும் மற்றொரு தங்கக் கடனை வாங்குவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
CRIF அமைப்பு நடத்திய ஆய்வின்படி, தங்கக் கடன் பெறும் நபர்களில் சுமார் 55 சதவீதம் பேர் முதல் கடன் பெற்ற ஆறு மாதங்களுக்குள் மீண்டும் புதிய தங்கக் கடனைப் பெறுகின்றனர். இதனால் ஒரே நபரின் கடன் சுமை தொடர்ந்து அதிகரிக்கும் நிலை உருவாகி வருகிறது.
மேலும், நாட்டில் நிலுவையில் உள்ள தங்கக் கடன்களின் மொத்த மதிப்பு 60.6 சதவீதம் உயர்ந்து ரூ.23.3 லட்சம் கோடியைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர பணத்தேவைக்காக தங்கத்தை அடமானம் வைப்பது அதிகரித்து வரும் நிலையில், பழைய கடனை அடைப்பதற்காக புதிய கடன் வாங்கும் பழக்கம் நிதி நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தலாம்.
தொடர்ந்து கடன் வாங்கி கடனை அடைக்கும் நிலை ஏற்பட்டால், அது கடன் பொறிக்குள் சிக்குவதற்கு வழிவகுக்கும். முறையாக கடனை திருப்பிச் செலுத்த முடியாத சூழலில் அடமானம் வைத்த தங்க நகைகள் ஏலத்திற்கு செல்லும் அபாயமும் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, தங்கக் கடன் வாங்கும்போது திருப்பிச் செலுத்தும் திறனை கணக்கிட்டு, தேவையான அளவு மட்டுமே கடன் பெறுவது முக்கியம்.




கருத்துகள் (0)