தங்கக் கடன் வாங்கிய 6 மாதத்திற்குள் மீண்டும் கடன் பெறும் 55% பேர்.. கடன் பொறியில் சிக்க வாய்ப்பு!

இந்தியாவில் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒருமுறை கடன் பெற்றவர்களில் கணிசமானோர் குறுகிய காலத்திலேயே மீண்டும் கடன் வாங்குவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. CRIF அமைப்பு நடத்திய ஆய்வின்படி, தங்கக் கடன் பெற்றவர்களில் சுமார் 55 சதவீதம் பேர் முதல் கடன் வாங்கிய ஆறு மாதங்களுக்குள் மீண்டும் மற்றொரு தங்கக் கடனைப் பெறுகின்றனர். இந்த நிலை மக்களின் நிதிச் சுமை அதிகரித்து வருவதையும், கடன் தேவைக்காக தங்கத்தை மீண்டும் மீண்டும் அடமானம் வைக்கும் போக்கு உருவாகியிருப்பதையும் காட்டுகிறது.
நாட்டில் நிலுவையில் உள்ள தங்கக் கடன்களின் மொத்த மதிப்பு 60.6 சதவீதம் அதிகரித்து ரூ.23.3 லட்சம் கோடியைக் கடந்துள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கத்தின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு எளிதில் கடன் கிடைப்பதால், பலரும் அவசரத் தேவைகளுக்கும் குடும்பச் செலவுகளுக்கும் இந்த முறையை நாடுகின்றனர். ஆனால், ஏற்கெனவே பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்காகவே மீண்டும் புதிய கடன் பெறும் நிலை உருவானால், அது நிதி நெருக்கடியை மேலும் அதிகரிக்கச் செய்யலாம்.
ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனைத் தொடர்ந்து வாங்குவது நீண்ட காலத்தில் கடன் பொறிக்குள் சிக்குவதற்கு வழிவகுக்கும் என நிதி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தவணை மற்றும் வட்டி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், அடமானம் வைத்துள்ள தங்க நகைகளை மீட்பதில் சிக்கல் ஏற்படலாம். கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்த முடியாத சூழலில், நகைகள் ஏலத்தில் விடப்படும் அபாயமும் இருப்பதால், தங்கக் கடன் பெறும்போது திருப்பிச் செலுத்தும் திறனை கணக்கிட்டு முடிவெடுக்க வேண்டியது அவசியம்.




கருத்துகள் (0)