டாஸ்மாக் பார்களுக்கு புதிய விதிமுறைகள் வெளியீடு.. டெண்டர் மூலம் தனியாருக்கு அனுமதி!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்து செயல்படும் பார்களை தனியார் மூலம் நடத்துவதற்கு மீண்டும் ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) அடிப்படையில் அனுமதி வழங்கப்பட உள்ளது. இதற்காக பார் நடத்த விரும்புவோர் பின்பற்ற வேண்டிய புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
புதிய நிபந்தனைகளின்படி, டாஸ்மாக் மதுபானக் கடைக்கு அருகிலோ அல்லது அந்தக் கடையில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குள்ளோ பார் அமைக்க வேண்டும். பார் செயல்படும் இடம் குறைந்தபட்சம் 20 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக இருக்க வேண்டும். மேலும், வாடிக்கையாளர்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் கைகழுவுவதற்கான வசதிகள் கட்டாயம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
பாருக்குள் 21 வயதுக்கு குறைவான நபர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் புதிய விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பார் செயல்படும் நேரமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பார்களை திறந்து நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை பின்பற்றி டெண்டர் மூலம் தனியார் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் பார் நடத்துவதற்கான அனுமதியை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)