செவ்வாய், நவம்பர் 24, 2026
உண்மையின் குரல்
அரசியல்

திரிஷா பெயரில் புதிய பேரவை தொடக்கம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் விருப்பம்!

திரிஷா பெயரில் புதிய பேரவை தொடக்கம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் விருப்பம்!

நடிகை திரிஷாவின் பெயரில் திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்டு புதிய நற்பணி பேரவை தொடங்கப்பட்டுள்ளதால், அவரது அரசியல் வருகை குறித்த விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ளன. திரிஷா தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும், அரசியலில் ஈடுபட்டு மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்றும் இந்த பேரவையின் நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

 

'இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை' என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் லோகோ அறிமுக விழா நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் லோகோவை வெளியிட்டு நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார்.

 

திரிஷா நடித்த 'சாமி' திரைப்படத்தில் அவரது கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்டு இந்த அமைப்பை தொடங்கியதாக ராஜகோபால் தெரிவித்துள்ளார். ரசிகர் மன்றமாக மட்டும் செயல்படாமல், பொதுமக்களுக்கு நேரடியாக உதவும் நற்பணி அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

மருத்துவ உதவி, சட்ட ஆலோசனை, மரம் நடுதல், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பேரவை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஏழை மக்களுக்கு மருத்துவ உதவிகளை அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்கவும், அரசு அலுவலகங்களில் தேவையான சான்றிதழ்களைப் பெற உதவவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க இணையதளம் ஒன்றும் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திரிஷா அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றும், விஜய்யுடன் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டால் நல்ல மாற்றங்களை கொண்டு வரலாம் என்றும் பேரவை நிர்வாகிகள் தங்களது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், திரிஷா தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், அது அவரது சொந்த விருப்பம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

திரிஷாவின் பெயரில் பேரவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கும் நடிகைக்கும் அதிகாரப்பூர்வ தொடர்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும், திரிஷா அரசியலில் ஈடுபட விருப்பமில்லை என ஏற்கெனவே தெரிவித்ததாகவும் கூறப்படுவதால், அவரது அரசியல் வருகை குறித்த தகவல்கள் தற்போது உறுதியான அறிவிப்பாக இல்லாமல் விவாதம் மற்றும் எதிர்பார்ப்புகளாகவே உள்ளன.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.