கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்துள்ள நிலையில், அவருக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அவரிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினர் நடவடிக்கை கோரி வருகின்றனர். இந்நிலையில், அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தாமதமின்றி விசாரணை நடத்த வேண்டும் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி புகார் அளித்துள்ளதாக கூறப்படும் நிலையில், புகாரின் அடிப்படையில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அரசுப் பொறுப்பில் இருக்கும் பெண் அதிகாரியின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் முக்கிய கடமை என்றும், அதிகாரம் அல்லது பதவி வகிப்பவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்கும் வகையில் அரசு உடனடியாக தலையிட்டு, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் தனது பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.




கருத்துகள் (0)