செவ்வாய், நவம்பர் 24, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

எஸ்பிஐ வங்கி மேலாளர் மீது புகார் அளித்த அழகிரி மகள் கயல்விழி சென்னை ஐகோர்ட் உத்தரவு!

எஸ்பிஐ வங்கி மேலாளர் மீது புகார் அளித்த அழகிரி மகள் கயல்விழி சென்னை ஐகோர்ட் உத்தரவு!

எஸ்பிஐ வங்கி கிளை மேலாளர் தன்னை அவமதிக்கும் வகையில் பேசியதாகக் கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தனது புகாரின் அடிப்படையில் வங்கி மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யவும், வங்கியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாதுகாக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

 

அடையாறு கஸ்தூரிபாய் நகரில் கயல்விழிக்கு சொந்தமான கட்டிடத்தில் எஸ்பிஐ வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. அங்குள்ள லிஃப்ட் பழுதடைந்தது தொடர்பாக வங்கி மேலாளர் ஹர்ஷின் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

இதையடுத்து, கடந்த ஜூலை 20ஆம் தேதி வங்கி மேலாளரை நேரில் சந்திக்க சென்ற கயல்விழி, அங்கு பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில் தன்னை அவமதிக்கும் வகையில் பேசியதாக சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், தனது புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

ஏற்கெனவே இந்த சம்பவம் தொடர்பாக வங்கி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் கயல்விழி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தன்னுடைய புகாரையும் விசாரித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கயல்விழி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

 

இந்த மனு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வங்கி கிளை மேலாளர் ஹர்ஷின் சிங் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.