வெள்ளி, நவம்பர் 27, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

வேலூரில் திருமண தகவல் மைய அலுவலகத்திற்குள் மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் காவல் நிலையத்தில் சரண்!

வேலூரில் திருமண தகவல் மைய அலுவலகத்திற்குள் மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் காவல் நிலையத்தில் சரண்!

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள திருமண தகவல் மைய அலுவலகத்திற்குள் புகுந்த கணவர், தனது மனைவியை கத்தியால் தாக்கிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்துவிட்டு ரத்தம் படிந்த கத்தியுடன் காவல் நிலையத்திற்குச் சென்ற அவர், போலீசாரிடம் சரணடைந்துள்ளார்.

 

அரப்பாக்கத்தைச் சேர்ந்த கீர்த்திகா (30), சத்துவாச்சாரியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஹரிபிரசாத் என்பவரை கடந்த 2018-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட ஹரிபிரசாத், அடிக்கடி அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு கீர்த்திகாவை அவர் தாக்கியதால், கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து கீர்த்திகா தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

 

மருமகனால் மகளுக்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சிய கீர்த்திகாவின் தாய் விஜயா, மகளைத் தான் வேலை செய்யும் சத்துவாச்சாரி திருமண தகவல் மைய அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு கீர்த்திகா இருப்பதை அறிந்த ஹரிபிரசாத், பட்டாக்கத்தியுடன் அலுவலகத்திற்குள் நுழைந்து அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் கீர்த்திகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகளைக் காப்பாற்ற முயன்ற விஜயாவுக்கும் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது.

 

இதையடுத்து, கொலை செய்த ஹரிபிரசாத் ரத்தம் படிந்த கத்தியுடன் சத்துவாச்சாரி காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதன் காரணமாக இந்தக் கொலையைச் செய்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்ததுடன், கீர்த்திகாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.