10 சவரன் நகைக்காக தாயைக் கொன்ற மகள்.. நாடகமாடிய பள்ளி ஆசிரியை கைது!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த கீதா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அவர் வைத்திருந்த 10 சவரன் தங்க நகைகள் காணாமல் போனதால், போலீசார் கொலை மற்றும் நகை திருட்டு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய போலீசார், நகைக்காக ஏற்பட்ட தகராறில் கீதாவின் மகள் சரண்யாவே அவரைக் கொலை செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். கொலைக்குப் பிறகு நடந்த சம்பவத்தை மறைத்து நாடகமாடியதும் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தாயைக் கொலை செய்ததாகக் கூறப்படும் பள்ளி ஆசிரியையான சரண்யாவை போலீசார் கைது செய்துள்ளனர். நகைக்காக சொந்த தாயையே கொலை செய்ததாக மகள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)