3 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு சித்த மருத்துவம், யோகா விழிப்புணர்வு திட்டம்.. ரூ.52 லட்சம் ஒதுக்கீடு!

பள்ளி மாணவர்களிடையே உடல் ஆரோக்கியம் மற்றும் நல்ல வாழ்க்கை முறையை வளர்க்கும் நோக்கில், தமிழக அரசு பாரம்பரிய மருத்துவம் மற்றும் யோகா சார்ந்த விழிப்புணர்வு திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள 23 வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி சட்டமன்றத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. தேசிய ஆயுஷ் இயக்கத்தின் வாயிலாக திட்டத்தை செயல்படுத்த ரூ.52.09 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சித்த மருத்துவத்தின் அடிப்படைகள், யோகா பயிற்சியின் பயன்கள் மற்றும் பாரம்பரிய உணவு முறைகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளது. அன்றாட வாழ்வில் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பது, உடலை சீராக பராமரிப்பது மற்றும் உணவு தேர்வுகளில் விழிப்புணர்வுடன் இருப்பது போன்ற அம்சங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மாணவர்கள் சிறுவயதிலேயே உடல்நலன் சார்ந்த நல்ல பழக்கங்களை கற்றுக்கொண்டு, அவற்றை தங்கள் வாழ்வில் பின்பற்றும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களிடையே பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் ஆரோக்கிய வாழ்வியல் குறித்த புரிதலை ஏற்படுத்துவதுடன், ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.




கருத்துகள் (0)