தந்தையை இழந்த 6 மாதத்தில் உயிரிழந்த பிளஸ் 2 மாணவி.. செம்மாண்டம்பாளையத்தில் சோகம்!

திருப்பூர் மாவட்டம் செம்மாண்டம்பாளையத்தைச் சேர்ந்த 16 வயது பிளஸ் 2 மாணவி சாதனா ரயில் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பு ரயில் விபத்தில் தனது தந்தையை இழந்த மாணவி, தற்போது அதே துயரமான சம்பவம் நடந்த பகுதியில் உயிரிழந்துள்ளார்.
சாதனாவின் தந்தை கார்த்திக், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகளை பள்ளியில் விட்டுவிட்டு திரும்பியபோது ரயில் மோதி உயிரிழந்தார். தந்தையின் திடீர் மரணம் குடும்பத்தினரை பெரும் துயரத்தில் ஆழ்த்தியிருந்தது. தந்தையுடன் மிகுந்த பாசத்துடன் இருந்த சாதனா, அவரது இழப்பால் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவரை தேடி வந்தனர். அப்போது வடுகன்காளிபாளையம் ரயில்வே கேட் அருகே மாணவி ரயில் மோதி உயிரிழந்த நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற விரைவு ரயில் மோதியதில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரை இழந்த நிலையில் தனது ஒரே மகளையும் இழந்த தாயின் நிலை அப்பகுதி மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)