செங்கல்பட்டில் நவம்பர் 27-ம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 1,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பாக, வரும் நவம்பர் 27-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வீரப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
முகாம் நடைபெறும் நாள் மற்றும் நேரம்:
வரும் நவம்பர் 27-ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை முகாம் நடைபெறவுள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்துகொண்டு, பல்வேறு துறைகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய உள்ளன.
யாரெல்லாம் பங்கேற்கலாம்?
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 18 வயது முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம். குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை தங்களது கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்புகளைத் தேடிக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு கல்வித் தகுதிகளைக் கொண்டவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால், வேலை தேடும் இளைஞர்கள் மட்டுமின்றி அனுபவமுள்ள வேலை தேடுபவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வேலை தேடுபவர்களுக்கு முக்கிய வாய்ப்பு!
ஒரே இடத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்களைச் சந்தித்து வேலைவாய்ப்புக்கான தேர்வு மற்றும் நேர்காணலில் பங்கேற்க இந்த முகாம் உதவியாக இருக்கும். எனவே, தகுதியுடையவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சுயவிவரக் குறிப்புகளுடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் வீரப்பன் கேட்டுக்கொண்டுள்ளார்.
வேலை தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்!




கருத்துகள் (0)