முடி உதிர்வை தடுக்க உதவும் உணவுகள் மற்றும் பராமரிப்பு முறைகள்!

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் முடி உதிர்வு பிரச்சினை அதிகரித்து வருகிறது. சிலருக்கு முடி மெதுவாக அடர்த்தி குறைந்து, நாளடைவில் தலையில் வழுக்கை ஏற்படும் நிலையும் உருவாகிறது. முடி உதிர்வை கட்டுப்படுத்தவும், தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உணவு மற்றும் பராமரிப்பு முறைகளில் கவனம் செலுத்துவது அவசியம்.
முடியின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் புரதம் மற்றும் இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் முக்கியமானவை. முட்டை, மீன், கீரை வகைகள், பேரிச்சம்பழம், பாதாம் மற்றும் பிற நட்ஸ் வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்குத் தேவையான சத்துக்களை வழங்க உதவும். குறிப்பாக, புரதச்சத்து நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
தலைமுடி மற்றும் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி மெதுவாக மசாஜ் செய்யலாம். வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தயிருடன் கலந்து தலையில் தடவி, சுமார் 20 நிமிடங்கள் கழித்து கழுவலாம். கற்றாழை சாற்றையும் தலைமுடி பராமரிப்புக்கு பயன்படுத்தலாம்.
தலைமுடி மற்றும் உச்சந்தலையை சுத்தமாக வைத்திருப்பதும் முக்கியம். தேவைக்கேற்ப தலைக்கு குளித்து, தலைமுடியில் அழுக்கு மற்றும் எண்ணெய் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ரசாயனங்கள் அதிகம் கலந்த ஹேர் டை போன்ற பொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதும் நல்லது.
மேலும், தினமும் போதுமான அளவு தண்ணீர் குடித்து, சத்தான உணவுகளை எடுத்துக்கொண்டு தலைமுடியை முறையாகப் பராமரிப்பது அவசியம். இருப்பினும், அதிகப்படியான முடி உதிர்வு அல்லது திடீரென முடி அடர்த்தி குறைந்தால், அதற்கான காரணத்தை கண்டறிய மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது.




கருத்துகள் (0)