திமுக தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தவறான முடிவு எடுத்துள்ளது சரிவு காலம் தொடங்கிவிட்டது என வைகோ விமர்சனம்!

மதுரையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, செய்தியாளர்களிடம் பேசும்போது தமிழக அரசியல் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்தார். தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக திமுக எடுத்துள்ள நிலைப்பாட்டை விமர்சித்த அவர், தாங்களே உருவாக்கிய சிக்கலில் திமுக சிக்கிக்கொண்டதாகக் கூறினார். இந்த முடிவால் திமுகவுக்கு சரிவு காலம் தொடங்கியுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மம்தா பானர்ஜி உள்ளிட்ட கூட்டணி தலைவர்களை சந்திக்க உள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்தும் வைகோ கருத்து தெரிவித்தார். இனிமேல் யார் யாரை சந்தித்து ஆலோசனை நடத்தினாலும் அதனால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என அவர் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்ட விவகாரம் குறித்துப் பேசிய வைகோ, பல ஆண்டுகளாக தர்கா அருகிலேயே தீபம் ஏற்றும் நடைமுறை இருந்து வந்ததாகக் குறிப்பிட்டார். அந்த மரபுக்கு மாறாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் சகோதரத்துவத்துடன் வாழும் மதுரையில், மத நல்லிணக்கத்தை பாதிக்கும் நோக்கத்துடன் சில சக்திகள் செயல்பட்டதாகவும், மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்ட சம்பவம் தனக்கு வேதனையளிப்பதாகவும் கூறினார்.
நீதிமன்ற தீர்ப்புகள் குறித்தும் விமர்சனம் முன்வைத்த வைகோ, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது விருப்பப்படி தீர்ப்புகளை வழங்குவதாகக் கருத்து தெரிவித்தார். அதே நேரத்தில் நீதிபதிகளை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க விரும்பவில்லை என்றும் விளக்கமளித்தார். மதுரை பாண்டி கோவில் அருகே மதிமுக மாவட்டச் செயலாளர் முனியசாமியின் இல்ல திருமண விழாவில் மணமக்களை வாழ்த்திய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு பேசினார்.




கருத்துகள் (0)