ராணுவப் பயிற்சியில் பீரங்கி ஏறி 2 வீரர்கள் உயிரிழப்பு!

ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற ராணுவப் போர் பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 32 பீரங்கி வாகனங்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஹரியானாவின் போஜராஜ் கிராமத்தில் நடைபெற்ற பயிற்சியின்போது, பீரங்கி வாகனத்தை இயக்கிய ஓட்டுநரின் பார்வையை அதிகளவில் எழுந்த புழுதி மறைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் முன்னால் இருந்த வீரர்கள் தெரியாமல், பீரங்கி அவர்கள் மீது ஏறியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நாயக் மணீஷ் குமார் மற்றும் நாயக் அனுஷ் குமார் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் ஹிசார் ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு இருவரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உயிரிழந்த வீரர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




கருத்துகள் (0)