சபரிமலை பக்தர்களுக்கு 6 மொழிகளில் புதிய டிஜிட்டல் சேவை அறிமுகம்!

சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் தங்களுக்குத் தேவையான பயணத் தகவல்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த விவரங்களை ஒரே இடத்தில் எளிதாகப் பெறும் வகையில் கேரள உள்ளாட்சித் துறை சார்பில் ‘சரண்’ (SARAN) என்ற புதிய டிஜிட்டல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தளத்தின் வாயிலாக சபரிமலை செல்லும் பாதைகளில் உள்ள ஓய்வு மையங்கள், தங்குமிடங்கள், மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள், பெட்ரோல் பங்குகள், ஏடிஎம் மையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட தகவல்களை பக்தர்கள் அறிந்துகொள்ள முடியும்.
மேலும், பூஜை நேரங்கள், அன்னதான வசதி, சிறப்புப் பேருந்து சேவைகள், மருத்துவ முகாம்கள் மற்றும் உள்ளூர் அறிவிப்புகள் குறித்த விவரங்களும் இதில் இடம்பெறுகின்றன. தமிழ், மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி என 6 மொழிகளில் இந்தச் சேவை வழங்கப்படுகிறது.
பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமாகவோ அல்லது https://saran.lsgdpr.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தியோ பக்தர்கள் இந்த வசதிகளைப் பெறலாம். தனியாக செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமின்றி, சபரிமலை பயணத்தை எளிதாக்கும் வகையில் இந்த டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)