உதயநிதி ஸ்டாலின் பேட்டி வீடியோவை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய வீடியோ மற்றும் அது தொடர்பான பதிவுகளை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த வழக்கு தொடர்பான சமூக வலைதளப் பதிவுகளை நீக்கவும், வழக்கு குறித்து செய்திகளை வெளியிடுவதற்கும் ஊடகங்களுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இன்று டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நாளிலிருந்து 116 நாட்கள் கழித்தே நீதிமன்றத் தலையீட்டுக்குப் பிறகு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், மாவட்ட ஆட்சியரிடம் தலைமைச் செயலாளர் சமரசம் பேச முயன்றதாகக் கூறி, அவரையும் இந்த விவகாரத்தில் விசாரிக்க வேண்டும் என டிஜிபியிடம் அளித்த புகாரில் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் முதலமைச்சருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையில், உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட கருத்துகள் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவும், உண்மைக்குப் புறம்பாகவும் இருப்பதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு இந்த முறையீடு முன்வைக்கப்பட்ட நிலையில், உதயநிதி ஸ்டாலினின் பேட்டி மற்றும் அது தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை மீறியிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவு தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.




கருத்துகள் (0)