வந்தே பாரத் ரயில் உணவில் வடைக்குள் இரும்பு போல்ட் பயணி புகார்!

பெங்களூரு – பெலகாவி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட வடைக்குள் இரும்பு போல்ட் இருந்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் ரயில் பயணிகளிடையே உணவின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
பெங்களூருவில் இருந்து பெலகாவி நோக்கி சென்ற வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர், தனக்கு வழங்கப்பட்ட உணவில் இருந்த வடைக்குள் பெரிய இரும்பு போல்ட் இருப்பதை கண்டுள்ளார். இதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு, ரயிலில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்த புகாரை தொடர்ந்து IRCTC சம்பவத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு, சம்பந்தப்பட்ட உணவு வழங்கும் நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், சமையலறையில் உணவு தயாரிக்கும் பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றவும், உணவு தயாரிப்பதற்கு முன்பு சமையல் உபகரணங்களை முழுமையாக ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க சமையலறையில் விரிவான ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)