50 ஆண்டுகளில் ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவு 54% சரிவு!

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் இயற்கையான உணவுகள், சத்தான காய்கறிகள், தூய்மையான குடிநீர் மற்றும் மாசற்ற சுற்றுச்சூழலில் வாழ்ந்ததால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றியதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது நவீன வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவை மனிதர்களின் உடல்நலத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன.
காய்கறி உற்பத்தியில் அதிகளவில் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுவது, உணவின் தரம் குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், இன்றைய இளைஞர்கள் பாரம்பரிய சத்தான உணவுகளை தவிர்த்து, துரித உணவுகளை அதிகம் உட்கொள்ளும் பழக்கத்திற்கு மாறி வருவதும் உடல்நல பாதிப்புகளுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்துடன் தொடர்புடைய டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவு கடந்த பல ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் நடைபெற்ற ஐரோப்பிய மனித இனப்பெருக்கம் மற்றும் கருவியல் சங்கத்தின் (ESHRE) கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வின்படி, 1972 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் ஆண்களின் சராசரி டெஸ்டோஸ்டிரோன் அளவு 54 சதவீதம் சரிவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் சுற்றுச்சூழலில் காணப்படும் ரசாயனப் பொருட்கள் இந்த ஹார்மோன் குறைவுக்கு காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் எதிர்காலத்தில் கவலைக்குரிய பிரச்சனையாக உருவெடுக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.




கருத்துகள் (0)