பள்ளி சமையலறையில் புகுந்த 7 அடி பாம்பு.. தந்தையுடன் சேர்ந்து பிடித்த 8-ம் வகுப்பு மாணவி!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் அரசு மகளிர் பள்ளியின் சமையலறைக்குள் சுமார் 7 அடி நீளமுள்ள சாரைப் பாம்பு புகுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பாம்பை பிடிக்கும் முயற்சியில் 8-ம் வகுப்பு மாணவி கனிஷ்கா துணிச்சலுடன் ஈடுபட்டார்.
தனது தந்தை பழனிச்சாமியுடன் இணைந்து மாணவி கனிஷ்கா பாம்பை லாவகமாகப் பிடித்தார். கனிஷ்காவின் தந்தை வனத்துறையில் வேட்டை தடுப்புக் காவலராக பணியாற்றி வருகிறார். அவர் தனது மகளுக்கு சிறுவயது முதலே பாம்புகளைப் பிடிப்பது தொடர்பான பயிற்சிகளை அளித்து வந்துள்ளார்.
அந்த பயிற்சியின் காரணமாக பள்ளி சமையலறைக்குள் புகுந்த பாம்பை தந்தையுடன் சேர்ந்து மாணவி திறமையாக பிடித்துள்ளார். 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியின் இந்த துணிச்சலான செயல் அப்பகுதி மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. கனிஷ்காவின் தைரியத்தையும் திறமையையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.




கருத்துகள் (0)