90 வயதிலும் ஆணழகன் போட்டியில் பங்கேற்று அசத்திய ஜப்பான் தாத்தா – இளைஞர்களுக்கு முன்னுதாரணம்!

வயது அதிகரிக்கும்போது உடல் தளர்ச்சி, மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பு. ஆனால், வயது என்பது சாதனைகளுக்குத் தடையல்ல என்பதைத் தனது விடாமுயற்சியால் நிரூபித்துள்ளார் ஜப்பானைச் சேர்ந்த 90 வயது கனசாவா என்ற முதியவர்.
ஸ்பெயின் நாட்டின் சாண்டா சுசானாவில் நடைபெற்ற சர்வதேச ஆணழகன் போட்டியில் பங்கேற்பதற்காக ஜப்பானில் இருந்து நீண்ட தூரம் பயணம் செய்து வந்துள்ளார். 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் களமிறங்கிய அவர், தனது 90 வயதிலும் போட்டிக்காகத் தீவிரமாக உடலைத் தயார்படுத்தியுள்ளார்.
போட்டிக்கு முன்பாக இளம் வீரர்களுக்கு இணையாக உடற்பயிற்சிகளில் ஈடுபட்டதுடன், தசைகளை வலுப்படுத்தவும் உடற்கட்டைப் பராமரிக்கவும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டுள்ளார். அவரது உடல் தகுதியையும் உற்சாகத்தையும் பார்த்த இளம் போட்டியாளர்கள் பலரும் வியப்படைந்துள்ளனர்.
90 வயதில் சர்வதேச மேடையில் ஏறி தனது உடற்கட்டையும் தசை வலிமையையும் வெளிப்படுத்தியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வயது அதிகரித்தாலும் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் தொடர்ந்து இலக்குகளை நோக்கிப் பயணிக்க முடியும் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்துவதே தனது நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் போட்டியில் முதல் மூன்று இடங்களுக்குள் அவரால் இடம்பிடிக்க முடியவில்லை. ஆனாலும், அதற்காக அவர் மனம் தளரவில்லை. 90 வயதில் சர்வதேசப் போட்டி மேடையில் இளம் வீரர்களுடன் இணைந்து பங்கேற்றதே தனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த முறையும் போட்டியில் பங்கேற்பேன் என்ற உறுதியையும் வெளிப்படுத்தியுள்ளார்.




கருத்துகள் (0)