அரசு, தனியார் ஊழியர்களுக்கு நற்செய்தி! தனிநபர் கடன் உச்சவரம்பு ரூ.35 லட்சமாக உயர்வு!

அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வழங்கப்படும் தனிநபர் கடனுக்கான உச்சவரம்பு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.35 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பணியாளர் கூட்டுறவு வங்கிகளின் கோரிக்கையை ஏற்று இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் க.லதா பிறப்பித்த உத்தரவின்படி, புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
புதிய விதிகளின்படி, ஒரு உறுப்பினருக்கு அதிகபட்சமாக ரூ.35 லட்சம் அல்லது அவரது மாத ஊதியத்தின் 25 மடங்கு ஆகியவற்றில் எது குறைவான தொகையோ அதுவே கடன் உச்சவரம்பாக நிர்ணயிக்கப்படும். மேலும், வழங்கப்படும் கடன் தொகையில் 5 சதவீதம் பங்குத்தொகையாக வசூலிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் தகுதியுள்ள பணியாளர் கூட்டுறவு வங்கி உறுப்பினர்கள் முன்பைவிட அதிக கடன் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.




கருத்துகள் (0)