ஃபேஸ்புக் மூலம் ஏற்பட்ட பழக்கம்.. நேரில் சந்தித்த 2 குழந்தைகளின் தாய் கொலை, பண்ணை நிலத்தில் புதைத்த காதலன் கைது!

கர்நாடக மாநிலத்தில் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நபரை நம்பி நேரில் சந்திக்கச் சென்ற 2 குழந்தைகளின் தாய் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான பிரீத்தி என்பவருக்கு சமூக வலைதளம் மூலம் புனீத் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சில நாட்களிலேயே இருவரும் நெருக்கமாகப் பேசி, நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, புனீத் வாடகைக் காரில் பிரீத்தியை ஹாசனில் இருந்து மைசூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பல்வேறு இடங்களுக்குச் சென்ற இருவரும், கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு அருகிலுள்ள விடுதியில் தங்கியுள்ளனர். பின்னர் அங்கிருந்து கே.ஆர்.பேட்டை நோக்கிச் சென்றபோது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, புனீத் பிரீத்தியை கட்டரகட்டா வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், பிரீத்தியின் தலையில் தாக்கியதுடன் அருகிலிருந்த கல்லாலும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பிரீத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலைக்குப் பிறகு தடயங்களை மறைக்கும் நோக்கில் அவரது உடலை தனது சொந்த ஊரான கரோட்டிகிராமத்திற்கு எடுத்துச் சென்று பண்ணை நிலத்தில் புதைத்ததாக போலீசார் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.
பிரீத்தி வீடு திரும்பாததால் அவரது கணவர் காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய புனீத்தை கைது செய்தனர். புதைக்கப்பட்டிருந்த உடலை மீட்டு அடையாளம் காணும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக புனீத் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சமூக வலைதளங்களில் அறிமுகமாகும் நபர்களின் உண்மையான அடையாளம் மற்றும் பின்னணியை உறுதிப்படுத்தாமல் அவர்களை முழுமையாக நம்பி நேரில் சந்திப்பது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது.




கருத்துகள் (0)