கணவருக்கு விஷம் கொடுத்து கொல்ல சதி? ரூ.2 கோடி காப்பீடு, பல கோடி சொத்துகளுக்காக மனைவி திட்டமிட்டதாக புகார்!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், கணவரின் சொத்துகள் மற்றும் ஆயுள் காப்பீட்டுத் தொகையை கைப்பற்றும் நோக்கில் அவருக்கு உணவில் விஷம் கலந்து கொலை செய்ய முயன்றதாக மனைவி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டிராவல்ஸ் தொழில் செய்து வரும் சுஷில் பட்நகர், சுமார் ரூ.5 முதல் ரூ.6 கோடி மதிப்பிலான தொழில் சொத்துகளையும், மனைவி ரேணுவை நாமினியாகக் கொண்ட ரூ.2 கோடி ஆயுள் காப்பீட்டையும் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
18 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருந்த இவர்களுக்கு 16 வயது மகனும், 12 வயது மகளும் உள்ளனர். கடந்த ஓராண்டாக சுஷில் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், அதற்கான காரணம் கண்டறிய முடியாமல் இருந்தது. கடந்த 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட ரத்தப் பரிசோதனையில் அவரது உடலில் அதிக அளவு ஈயம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் காசியாபாத்தில் உள்ள மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் ஈய நச்சுப் பாதிப்பை உறுதி செய்தும், அது எவ்வாறு உடலுக்குள் சென்றது என்பது குறித்து தெளிவான காரணம் கிடைக்கவில்லை. நகைத் தொழில் தொடர்பான பணிகளில் ரேணு ஈடுபட்டிருந்ததால், நகை தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஈயம் தொடர்பாக சந்தேகம் எழுந்தது. இதற்கிடையில், மனைவியிடமிருந்து பிரிந்து தனியாக இருந்த காலத்தில் சுஷிலின் உடலில் ஈயத்தின் அளவு குறைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவருக்கு மனைவி மீது சந்தேகம் அதிகரித்தது.
இந்த வழக்கில் தம்பதியின் 12 வயது மகள் தெரிவித்த தகவல் முக்கிய திருப்பமாக அமைந்தது. தந்தைக்கு வழங்கப்படும் உணவை தனியாக வைத்துவிட்டு, மற்றவர்களுக்குப் பரிமாறப்படும் உணவில் தாயார் ஏதோ ஒரு பொருளை தெளிப்பதைப் பார்த்ததாக சிறுமி கூறியுள்ளார். உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்ததால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சுஷில் தனது குடும்பத்தினரையும், தொழிலில் உதவி செய்து வந்த 21 வயது உறவினர் தேவ் பட்நகரையும் கவனித்தபோது, அவர்களுக்கும் உடல்நலப் பிரச்சினைகள் இருந்தது தெரியவந்தது. மருத்துவ பரிசோதனையில் அவர்களுக்கும் ஈய நச்சுப் பாதிப்பு உறுதியானதாக கூறப்படுகிறது. தனது கணவருக்கு ஆதரவாக இருந்த மகனையும் குறிவைத்து ரேணு செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
மருத்துவ அறிக்கைகள் மற்றும் மகளின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு சுஷில் அளித்த புகாரின் பேரில், ரேணு, அவரது மாமியார் மற்றும் ரேணுவின் சகோதரர்கள் ரவி சக்சேனா, சுஷில் கிர்தார் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உணவில் நச்சுப் பொருள் கலக்கப்பட்டதா, அது எங்கிருந்து பெறப்பட்டது, இந்தச் சம்பவத்தில் மற்றவர்களின் பங்கு என்ன என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




கருத்துகள் (0)