நடுக்கடலில் மீன்பிடித்தபோது நெஞ்சுவலியால் உயிரிழந்த திமுக நிர்வாகி!

தூத்துக்குடியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற திமுக நிர்வாகி ஒருவர், நடுக்கடலில் ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி காந்திநகர் 4-வது தெருவைச் சேர்ந்த 40-வது வார்டு திமுக நிர்வாகியும் மீனவருமான கிளாஸ்டன் (50), நேற்று நவம்பர் 23-ம் தேதி சக மீனவர்களுடன் விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். உவரி அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து உடனிருந்த மீனவர்கள் அவருக்கு முதலுதவி அளித்ததுடன், நிலைமையை உணர்ந்து படகை அவசரமாக கரைக்கு திருப்பியுள்ளனர். பின்னர் கிளாஸ்டனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது ஏற்பட்ட இந்த திடீர் உயிரிழப்பு, அவரது குடும்பத்தினருக்கும் சக மீனவர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)