வெள்ளி, நவம்பர் 27, 2026
உண்மையின் குரல்
இந்தியா

கார்த்திகை பௌர்ணமி நாடகத்தில் அனுமன் வேடமிட்ட கலைஞர் மேடையிலேயே உயிரிழப்பு!

கார்த்திகை பௌர்ணமி நாடகத்தில் அனுமன் வேடமிட்ட கலைஞர் மேடையிலேயே உயிரிழப்பு!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் கார்த்திகை பௌர்ணமி கொண்டாட்டத்தையொட்டி நடைபெற்ற ராமாயண நாடகத்தில் அனுமன் வேடமிட்டு நடித்த கலைஞர் ஒருவர் மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கவுடியா கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் நாடகம் நடைபெற்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

சனகேமுண்டி பகுதியைச் சேர்ந்த 38 வயதான மிதுன் பிரதான், நாடகத்தில் அனுமன் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மேடையில் மயங்கி விழுந்தார். இதைக் கண்ட பார்வையாளர்கள் மற்றும் உடன் நடித்த கலைஞர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக நாடகம் நிறுத்தப்பட்டு, அங்கிருந்தவர்கள் மிதுனை மீட்டு அருகிலுள்ள அடபடா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

தகவல் கிடைத்ததும் பட்டாப்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், மரணத்திற்கான உறுதியான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

பண்டிகை கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட இந்த துயர சம்பவம் அவரது குடும்பத்தினரையும், கிராம மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த மிதுன் பிரதானின் குடும்பத்திற்கு உதவி வழங்கக் கோரி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பெர்ஹாம்பூர் துணை ஆட்சியர் அவினாஷ் குமார், செஞ்சிலுவைச் சங்க நிதியிலிருந்து அவரது குடும்பத்திற்கு ரூ.30,000 நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.