ஓஎன்ஜிசி நிறுவனத்தில் 3,047 அப்ரண்டிஸ் பணியிடங்கள் – 10ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்! கடைசி நாள் நவம்பர் 20!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் (ONGC), நாடு முழுவதும் காலியாக உள்ள 3,047 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறுவனத்தில் பயிற்சி பெற விரும்பும் இளைஞர்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
இந்தப் பணியிடங்கள் ஃபிட்டர், எலக்ட்ரீசியன், மெக்கானிக், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப மற்றும் நிர்வாகப் பிரிவுகளின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளன. கல்வித் தகுதியைப் பொறுத்தவரை 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பல்வேறு துறைகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். இருப்பினும், மத்திய அரசின் நடைமுறையில் உள்ள விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
இந்தப் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வரும் நவம்பர் 20, 2026ஆம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முன்பு கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் தேர்வு நடைமுறை உள்ளிட்ட முழுமையான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்த்துக் கொள்வது அவசியம்.




கருத்துகள் (0)