பள்ளிக்கல்வித்துறையில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் கட்டாய மாறுதல்.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வை எமிஸ் (EMIS) இணையதளம் வாயிலாக நடத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, பணியிட மாறுதல் தொடர்பான நடைமுறைகள் மற்றும் தகுதி விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரை மட்டுமே பொதுமாறுதல் வழங்கப்படும். ஒரே அலுவலகத்தில் ஜூன் 30ஆம் தேதி நிலவரப்படி தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் வழங்கப்படும். மேலும், ஒரே அலுவலகத்தில் பிரிவு மாற்றம் செய்து இந்த மாறுதலை தவிர்க்கவும் அனுமதி கிடையாது.
இருப்பினும், குரூப் டி பணியாளர்கள், ஓட்டுநர்கள், ஆய்வக உதவியாளர்கள், 100 சதவீத பார்வையற்றோர் மற்றும் ஓராண்டுக்குள் ஓய்வு பெற உள்ள பணியாளர்கள் ஆகியோருக்கு கட்டாய மாறுதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விருப்பத்தின் அடிப்படையில் பணியிட மாறுதல் கோருபவர்கள், தற்போதைய பணியிடத்தில் குறைந்தது ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும். அவர்கள் அதிகபட்சம் 3 இடங்களை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். கட்டாய மாறுதல் நடைமுறைகள் நிறைவடைந்த பின்னரே விருப்ப மாறுதல் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)