தவெகவில் இணையப் போவதாகப் பரவும் வதந்தி! கஸ்தூரி திட்டவட்ட மறுப்பு!

பொதுவெளியில் நடைபெற்ற இயல்பான சந்திப்பைத் தவறான கண்ணோட்டத்தில் சித்தரிப்பதாக நடிகையும் பாஜக நிர்வாகியுமான கஸ்தூரி அதிருப்தி தெரிவித்துள்ளார். மரியாதை நிமித்தமாக நடைபெற்ற உரையாடலைத் திரித்துப் பேசுவது ஏற்கத்தக்கதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் மற்றும் செய்தியாளர்கள் முன்னிலையில், அமைச்சரின் சகோதரர் வெங்கட்ரமணனிடம் நலம் விசாரித்ததைச் சிலர் தவறான நோக்கத்துடன் சித்தரிப்பதாகக் கஸ்தூரி குற்றம்சாட்டியுள்ளார். அரசியலில் கொள்கை ரீதியான கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பானது என்றாலும், தனிப்பட்ட விரோதத்தைத் தான் ஒருபோதும் ஆதரித்ததில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தான் இணையப்போவதாகப் பரவி வரும் தகவல்களையும் அவர் மறுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் நலப் பணிகளால் ஈர்க்கப்பட்டே பொதுவாழ்வில் ஈடுபடத் தொடங்கியதாகக் குறிப்பிட்ட அவர், தமிழக பாஜக தலைமையே தனக்கு வழிகாட்டியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னைப் பற்றித் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்புவதன் பின்னணியில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். இத்தகைய தகவல்களை மக்கள் நம்பமாட்டார்கள் என்றும் கஸ்தூரி கூறியுள்ளார்.
தனது சந்திப்பைத் தவறாகச் சித்தரிப்பதுடன், சாதி, தொழில் மற்றும் பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் அவதூறு பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுபோன்ற செயல்களுக்கு அஞ்சப்போவதில்லை எனத் தெரிவித்த கஸ்தூரி, தனக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் கட்சித் தலைமைக்கும் சக நிர்வாகிகளுக்கும் நன்றியும் தெரிவித்துள்ளார்.




கருத்துகள் (0)