திங்கள், அக்டோபர் 12, 2026
உண்மையின் குரல்
இந்தியா

வருமான வரித்துறை அதிகாரிகள் என நடித்து ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்! முன்னாள் ஓட்டுநர் உட்பட 10 பேர் கைது!

வருமான வரித்துறை அதிகாரிகள் என நடித்து ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்! முன்னாள் ஓட்டுநர் உட்பட 10 பேர் கைது!

Writing


மும்பையில் வருமான வரித்துறை அதிகாரிகள் எனக் கூறி மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் போலி சோதனை நடத்தி, ரூ.1 கோடிக்கும் அதிகமான தொகையைக் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் முன்னாள் ஓட்டுநர் உட்பட 10 பேரை மும்பை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை அந்தேரி கிழக்குப் பகுதியில் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருபவர் ராஜ்குமார் கந்தசாமி. கடந்த ஜூலை மாதம் இவரது அலுவலகத்திற்குள் 9 பேர் கொண்ட கும்பல் நுழைந்துள்ளது. தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக்கொண்ட அவர்கள், அலுவலகத்தில் சோதனை நடத்துவது போல் நாடகமாடியுள்ளனர்.

இதையடுத்து, நிறுவன ஊழியர்களின் செல்போன்களைப் பறித்ததுடன், கண்காணிப்பு கேமராக்களையும் அணைத்துள்ளனர். வரி ஏய்ப்பு செய்திருப்பதாகக் குற்றம்சாட்டி, ரூ.1 கோடிக்கும் அதிகமான பணத்தைக் கொடுக்க வேண்டும் என ராஜ்குமாரை மிரட்டியுள்ளனர். ஆனால், தான் முறையாக வரி செலுத்தி வருவதாகக் கூறிய அவர், பணம் கொடுக்க மறுத்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் கும்பல் செய்த ஒரு தவறு அவர்களைக் காட்டிக்கொடுத்துள்ளது. அலுவலகக் கண்காணிப்பு கேமராக்களை அணைத்த அவர்கள், காட்சிகளைச் சேமிக்கும் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரை (DVR) அணைக்க மறந்துவிட்டனர். மேலும், சோதனையை முடித்துவிட்டு எந்த ஆவணங்களையும் எடுத்துச் செல்லாமல் அவர்கள் வெளியேறியதும் ராஜ்குமாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தனது கணக்காளருடன் சென்று விசாரித்தபோது, அந்த அலுவலகத்தில் சோதனை நடத்த வருமான வரித்துறை சார்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், ராஜ்குமாரால் பணியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஓட்டுநர் சந்தோஷ் கபட்கர், அவரைப் பழிவாங்கும் நோக்கில் இந்தச் சதியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. உண்மையான வருமான வரித்துறை ஊழியர்கள் சிலருடன் இணைந்து அவர் போலி சோதனையை நடத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னாள் ஓட்டுநர் உள்ளிட்ட 10 பேரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த மோசடியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.