ஜாமீனில் வெளியே அழைத்து வந்த மகனே தாயைக் கொலை செய்த கொடூரம் – தருமபுரியில் அதிர்ச்சி சம்பவம்!

தருமபுரி மாவட்டம் பழைய இண்டூர் பகுதியில் குடிப்பழக்கத்தைக் கைவிடுமாறு அறிவுரை கூறிய தாயை, 19 வயது மகனே இரும்பு ராடால் தாக்கிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த மகன், வீட்டில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது இந்தச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பழைய இண்டூரைச் சேர்ந்த சின்னபாப்பா (42) என்பவரின் மகன் தேவராஜ் (19). கூலித் தொழில் செய்து வந்த அவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இண்டூர் பேருந்து நிலையத்தில் மதுபோதையில் காவலரின் தொப்பியை அணிந்து ரகளையில் ஈடுபட்டதாக, இண்டூர் போலீசார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மகனை சிறையிலிருந்து வெளியே அழைத்து வர வேண்டும் என்பதற்காக சின்னபாப்பா சுமார் ரூ.40 ஆயிரம் செலவு செய்து, இரண்டு நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். மகனின் எதிர்காலம் கருதி மதுப்பழக்கத்தைக் கைவிடுமாறு அவர் அறிவுரை கூறியுள்ளார். இதனால் தாய்க்கும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், வீட்டிலிருந்த இரும்பு ராடால் தேவராஜ் தனது தாயைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. சின்னபாப்பாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு விரைந்து வந்தனர். ஆனால் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால், சாவித் துவாரம் வழியாகப் பார்த்தபோது தேவராஜின் கையில் ரத்தக்கறையுடன் இரும்பு ராடு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த இண்டூர் போலீசார், தேவராஜிடம் பேசி கதவைத் திறக்கச் செய்தனர். பின்னர் அவரைக் கைது செய்தனர். வீட்டுக்குள் சின்னபாப்பா உயிரிழந்த நிலையில் கிடந்தார்.
இதற்கிடையே, தேவராஜ் கஞ்சா போதையில் இந்தக் கொலையைச் செய்ததாகத் தகவல்கள் பரவின. ஆனால் அவர் கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படுவதை போலீசார் மறுத்துள்ளனர். மதுப்பழக்கம் தொடர்பாகத் தாய் கண்டித்ததால் ஏற்பட்ட ஆத்திரம் மற்றும் ஈகோ காரணமாகவே இந்தச் சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சின்னபாப்பாவின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட தேவராஜ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுமார் ரூ.40 ஆயிரம் செலவு செய்து ஜாமீனில் மகனை வெளியே அழைத்து வந்த தாயே, அவரது தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பழைய இண்டூர் மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)