கிருஷ்ணகிரியில் கொள்ளையடிக்கத் திட்டமிட்ட 4 இளைஞர்கள் கைது – கத்தி, முகமூடி, மயக்க மருந்து உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்!

கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டதாகக் கூறப்படும் 4 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து கத்தி, முகமூடி, மயக்க மருந்து, ஊசி, ஆசிட் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி நகர காவல்துறையினர் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பேருந்து நிலையத்தில் கருப்பு நிற ஆடைகளை அணிந்திருந்த 4 இளைஞர்கள் தூங்கிக்கொண்டிருப்பதைக் கவனித்துள்ளனர். அவர்களை எழுப்பி விசாரித்ததுடன், அவர்கள் வைத்திருந்த பைகளையும் சோதனையிட்டுள்ளனர்.
அப்போது, கத்தி, முகமூடிகள், கையுறைகள், மயக்க மருந்து, ஊசி, லேசர் லைட், பூச்சிக்கொல்லி மருந்து, ஆசிட் உள்ளிட்ட சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நான்கு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில், கைது செய்யப்பட்டவர்களில் இருவர் கல்லூரி மாணவர்கள் என்பதும், சமூக வலைதளங்களில் கொள்ளை தொடர்பான வீடியோக்களைப் பார்த்து அதன்படி கொள்ளையடிக்கத் திட்டமிட்டதாக அவர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
கைரேகைகள் பதிவாகாமல் இருக்க கையுறைகள், அடையாளம் தெரியாமல் இருக்க முகமூடிகள், கண்காணிப்பு கேமராக்களை மறைப்பதற்கான ஸ்ப்ரே பெயிண்ட் உள்ளிட்டவற்றைத் தயாராக வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், பகல் நேரத்தில் உணவு விநியோக ஊழியர்களைப் போல வேடமிட்டு நோட்டமிட்டு, இரவு நேரத்தில் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றத் திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.
தங்களுக்குள் ரகசியமாகத் தகவல் பரிமாறிக்கொள்ள லேசர் லைட்டையும் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, நான்கு பேர் மீதும் கொள்ளை முயற்சி தொடர்பான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். காவல்துறையினரின் இரவு ரோந்துப் பணியின்போது இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.




கருத்துகள் (0)