கன்னியாகுமரியில் ‘ஆல் மோஸ்ட் நல்லவன்’ பட உதவி இயக்குநருக்கு அரிவாள் வெட்டு!

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் ‘ஆல் மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படப்பிடிப்பு முடிந்த பின்னர், அங்கு இருந்த பட்டுக்கோட்டை சூரப்பள்ளத்தைச் சேர்ந்த உதவி இயக்குநர் கார்த்திகை சீலன் (44) என்பவரை, பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த கார்த்திகை சீலன், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
திரைப்படப் படப்பிடிப்பு முடிந்ததும் உதவி இயக்குநர் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரைத் தாக்கிய நபர் யார், எதற்காக இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளியைக் கண்டறியவும், தாக்குதலுக்கான காரணத்தை அறியவும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.




கருத்துகள் (0)