காதலை கைவிட மறுத்த 10ஆம் வகுப்பு மாணவி கொலை – தந்தையே கழுத்தை நெரித்ததாகக் குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே, காதல் விவகாரத்தில் 10ஆம் வகுப்பு படித்து வந்த தனது மகளைக் தந்தையே கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வானூர் தாலுகாவைச் சேர்ந்த வி. பரங்கனி கிராமத்தில் வசிக்கும் சிவசாஸ்திரி (40) என்பவர் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவரது இரண்டாவது மகள், ராணிப்பேட்டை மாவட்டம் காரை கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கிப் படித்து வந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெற்றோருக்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து, மாணவி சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டு கரசானூரில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், அந்த இளைஞருடன் மாணவி தொடர்ந்து தொலைபேசியில் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தந்தை அவரைக் கண்டித்துள்ளார்.
சம்பவத்தன்று மாணவியின் தாயார் உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ராணிப்பேட்டைக்குச் சென்றிருந்தார். இரவு வீட்டில் தந்தையும் இரண்டாவது மகளும் இருந்த நிலையில், மூத்த மகளை அருகிலுள்ள சித்தப்பா வீட்டில் தூங்கச் செல்லுமாறு அனுப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்பின்னர், மகளிடம் காதல் விவகாரத்தைக் கைவிட்டு படிப்பில் கவனம் செலுத்துமாறு தந்தை அறிவுறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது ஆத்திரமடைந்த தந்தை மகளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, தனது சகோதரரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு மகளைக் கொலை செய்துவிட்டதாக அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த சகோதரர், மாணவியை வானூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இதற்கிடையில், மகளைக் கொலை செய்ததாகக் கூறி சிவசாஸ்திரி வானூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரைக் கைது செய்த போலீசார், வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதல் விவகாரத்தில் 10ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)