மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்கிறதா? புதிய பயனாளிகளுக்கும் வாய்ப்பு.. அரசு எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்திட்டத்தின் கீழ் சுமார் 1 கோடியே 31 லட்சம் பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், தனது தேர்தல் வாக்குறுதியின்படி மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவதாக அறிவித்திருந்தார். இதனால் பெண்கள் மத்தியில் தொகை உயர்வு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆனால், எதிர்பார்க்கப்பட்ட காலகட்டத்தில் உயர்த்தப்பட்ட தொகை வழங்கப்படாமல், தற்போதும் ரூ.1,000 மட்டுமே தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. நிதி நிலைமை மற்றும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.
இதற்கிடையே, புதிதாகத் திருமணமானவர்கள், புதிய குடும்ப அட்டை பெற்றவர்கள் மற்றும் தகுதி இருந்தும் இதுவரை திட்டத்தில் சேர முடியாத பெண்கள் புதிய விண்ணப்பங்களுக்காகக் காத்திருக்கின்றனர். இந்நிலையில், திட்டத்தில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்து தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே உதவித்தொகை சென்றடைவதை உறுதி செய்ய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக புதிய பயனாளிகளைச் சேர்ப்பதுடன், மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் புதிய விண்ணப்பங்கள் எப்போது தொடங்கும்? மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1,000 எப்போது ரூ.2,500 ஆக உயர்த்தப்படும்? என்ற எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பயனாளிகள் காத்திருக்க வேண்டியுள்ளது.




கருத்துகள் (0)