ஞாயிறு, நவம்பர் 01, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தமிழகம் முழுவதும் ஆட்டோ கட்டணம் அதிரடி உயர்வு.. இனி குறைந்தபட்ச கட்டணம் ரூ.50! புதிய கட்டண விவரம் வெளியீடு..

தமிழகம் முழுவதும் ஆட்டோ கட்டணம் அதிரடி உயர்வு.. இனி குறைந்தபட்ச கட்டணம் ரூ.50! புதிய கட்டண விவரம் வெளியீடு..

 

 

தமிழகத்தில் பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கப்பட்டு வரும் நிலையில், கூடுதல் பேருந்துகளிலும் இலவசப் பயணத்தை விரிவுபடுத்தும் வகையில் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆட்டோக்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், தங்களது வருமானம் பாதிக்கப்படுவதாகவும் ஆட்டோ ஓட்டுநர்கள் கவலை தெரிவித்து வந்தனர்.

 

மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரித்துள்ளதால், கடந்த 13 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என ஓட்டுநர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.

 

இந்நிலையில், ஓட்டுநர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

புதிய கட்டணத்தின்படி, முதல் 1.8 கி.மீ. தூரத்திற்கான குறைந்தபட்சக் கட்டணம் ரூ.25-லிருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், கூடுதலாகப் பயணிக்கும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.12-லிருந்து ரூ.25 ஆகக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வழக்கமான கட்டணத்தைவிட ஒன்றரை மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். ஆட்டோ காத்திருக்கும் நேரத்திற்கு நிமிடத்திற்கு ரூ.1 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

மலைப்பகுதிகளில் முதல் 1.8 கி.மீ. தூரத்திற்கு ரூ.60-ம், கூடுதல் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.30-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

இந்தக் கட்டண உயர்வு ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆட்டோக்களை அன்றாடப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

 

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.