திங்கள், நவம்பர் 23, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

மழை பொய்த்ததால் உடன்குடியில் கருகும் பனை மரங்கள் கருப்பட்டி உற்பத்திக்கு பாதிப்பு அச்சம்!

மழை பொய்த்ததால் உடன்குடியில் கருகும் பனை மரங்கள் கருப்பட்டி உற்பத்திக்கு பாதிப்பு அச்சம்!

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் போதிய வடகிழக்கு பருவமழை பெய்யாததால் வறட்சி நிலை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பனை மரங்கள் தண்ணீரின்றி காய்ந்து கருகத் தொடங்கியுள்ளன. பனை மரங்களை நம்பி வாழும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் இந்த நிலைமையால் கவலை அடைந்துள்ளனர்.

 

உடன்குடி பகுதியில் தயாரிக்கப்படும் கருப்பட்டி தனித்துவமான சுவைக்காக புகழ்பெற்றதுடன், அதற்கு புவிசார் குறியீடும் கிடைத்துள்ளது. இப்பகுதியில் உள்ள பனை மரங்களில் இருந்து பதநீர் சேகரித்து, அதனை காய்ச்சி கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது. இந்த உற்பத்தியை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் வாழ்ந்து வரும் நிலையில், தற்போது நிலவும் வறட்சி பனை வளத்தையே பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

வடகிழக்கு பருவமழை தொடக்கத்தில் சில இடங்களில் மழை பெய்தாலும், தொடர்ந்து போதிய மழை கிடைக்காததால் பனை ஓலைகள் காய்ந்து வருகின்றன. இதனால் அடுத்த கோடை காலத்தில் பதநீர் உற்பத்தி பாதிக்கப்படுமோ என்ற அச்சமும் தொழிலாளர்களிடையே எழுந்துள்ளது.

 

மேலும், உடன்குடி சுற்றுவட்டாரத்தில் உள்ள குளங்கள் மற்றும் நீர்வரத்து கால்வாய்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன. நீர்நிலைகளில் குறைந்த அளவே மழைநீர் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் வறட்சியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பனை மரங்களை பாதுகாக்கவும், பாதிக்கப்பட்ட மரங்கள் குறித்து வேளாண்மைத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.