ஞாயிறு, நவம்பர் 29, 2026
உண்மையின் குரல்
உலகம்

நேபாளக் குகையில் சிக்கிய இந்தியப் பெண் சுற்றுலாப் பயணி பத்திரமாக மீட்பு!

நேபாளக் குகையில் சிக்கிய இந்தியப் பெண் சுற்றுலாப் பயணி பத்திரமாக மீட்பு!

நேபாளத்தின் பொகாரா பகுதியில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ‘பேட் கேவ்’ குகைக்குள் சிக்கிய இந்தியப் பெண் சுற்றுலாப் பயணி, நீண்ட முயற்சிக்குப் பிறகு காயங்களின்றிப் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுண்ணாம்புக் கற்களால் உருவான இந்தக் குகையைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மிகவும் குறுகலான பாறை இடுக்கிற்குள் அந்தப் பெண் சிக்கிக்கொண்டார். அந்த இடத்தில் அவரால் முன்னோக்கிச் செல்லவோ, பின்னோக்கித் திரும்பவோ முடியவில்லை. இதனால் அச்சமடைந்த அவர், தனது தாயை அழைத்தபடி உதவி கேட்டு கதறியுள்ளார்.

அவரது சத்தத்தைக் கேட்ட சக சுற்றுலாப் பயணிகள் உடனடியாக உதவிக்கு வந்தனர். அவர்களில் ஒருவர் டார்ச் விளக்குடன் குகைக்குள் சென்று, பயத்தில் இருந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறி தைரியமளித்தார். மேலும், அவர் நகர்வதற்கு வசதியாக கனமான பையை வாங்கிக்கொண்டதுடன், மீட்புக் குழுவினரையும் அழைத்து வருவதாகத் தெரிவித்தார்.

தகவலறிந்து வந்த பாதுகாப்புப் படையினரும் மீட்புக் குழுவினரும் கடும் முயற்சிக்குப் பிறகு அந்தப் பெண்ணை பாறை இடுக்கிலிருந்து பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர். அவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருள் சூழ்ந்தும் வழுக்கும் தன்மையுடனும் காணப்படும் இதுபோன்ற குகைகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், தகுந்த காலணிகள் மற்றும் விளக்குகளை எடுத்துச் செல்வதுடன், உள்ளூர் வழிகாட்டிகளின் உதவியுடன் எச்சரிக்கையாகச் சுற்றிப் பார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.