நிச்சயதார்த்தத்திற்கு ஒரு நாள் முன்பு காதல் விவகாரம்.. 19 வயது மகளை கொலை செய்த தந்தை கைது!

தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில், திருமணத்திற்கு முன்பு காதல் விவகாரத்தை தெரிவித்த மகளை தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையை தற்கொலையாக சித்தரிக்க முயன்ற தந்தை, போலீஸ் விசாரணையில் சிக்கியுள்ளார்.
நார்னூர் மண்டலத்துக்கு உட்பட்ட உம்ரி கிராமத்தைச் சேர்ந்த கைலாஷ் அடே என்பவரின் 19 வயது மகள் கல்யாணிக்கு, நவம்பர் 25-ம் தேதி வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், நவம்பர் 23-ம் தேதி இரவு தனது தாய்மாமன் மகனை காதலிப்பதாக கல்யாணி பெற்றோரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஆத்திரமடைந்த தந்தை கைலாஷ், நவம்பர் 24-ம் தேதி மகள் தூங்கிக் கொண்டிருந்தபோது கழுத்தை நெரித்து கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர், மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி சம்பவத்தை மறைக்க முயன்றதுடன், பெற்றோர் பார்த்த திருமண வரன் பிடிக்காததால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கிராமத்தினரிடமும் தெரிவித்துள்ளார்.
மேலும், குடும்பத்தினர் அவசரமாக இறுதிச் சடங்குகளையும் முடித்துள்ளனர். இருப்பினும், சம்பவத்தில் சந்தேகம் அடைந்த கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், கைலாஷிடம் நடத்திய விசாரணையில் மகளை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
குடும்ப கௌரவம் என்ற காரணத்தால் மகளை கொலை செய்ததாக அவர் தெரிவித்ததைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)