திருமண முடிவில் ஏற்பட்ட தகராறு.. மகனை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற தாய்!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் மகனை தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், இந்த கொலை வழக்கில் தாயை கைது செய்துள்ளனர்.
ஜக்கேனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான முத்துராஜ், பெங்களூருவில் வேலை செய்து வந்தார். வார இறுதி நாட்களில் தனது சொந்த ஊருக்கு வந்து குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது வழக்கம். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை காலை வீட்டின் வெளியே தலையில் பலத்த காயங்களுடன் அவர் உயிரிழந்து கிடந்தார். அவரது உடலை தாயார் சிவம்மா முதலில் பார்த்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து விசாரணை நடத்திய துமகூரு ஊரக போலீசார், கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த முத்துராஜை அவரது தாயார் சிவம்மா இரும்புக் கம்பி மற்றும் மரக்கட்டையால் தாக்கிய காட்சிகள் பதிவாகியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சிவம்மாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மகனின் திருமணம் தொடர்பான முடிவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அந்த ஆத்திரத்தில் மகனை தாக்கிக் கொன்றதாகவும் அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சிவம்மாவை கைது செய்த காவல்துறையினர், வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)