தனுஷின் முந்தைய படங்களின் சாதனையை முறியடித்த ஓம் திரைப்படம் முதல் நாள் வசூலில் புதிய மைல்கல்!

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஓம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. நேற்று நவம்பர் 20ஆம் தேதி வெளியான இப்படம், முதல் நாளிலேயே உலகளவில் ரூ.31.55 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விடுமுறை அல்லாத நாளில் வெளியான இப்படம், தனுஷின் முந்தைய திரைப்படங்களின் முதல் நாள் வசூல் சாதனைகளை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு தனுஷின் அதிக முதல் நாள் வசூல் பெற்ற படமாக ‘தேரே இஷ்க் மெய்ன்’ இருந்து வந்த நிலையில், தற்போது அந்த சாதனையை ‘ஓம்’ திரைப்படம் முறியடித்துள்ளது.
இந்தியாவில் இப்படம் ரூ.20.55 கோடியும், வெளிநாடுகளில் ரூ.11 கோடியும் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வசூலில் தமிழ்ப் பதிப்பு அதிக பங்களிப்பை வழங்கியுள்ளது. தமிழில் ரூ.13.35 கோடியும், தெலுங்கில் ரூ.4 கோடியும், இந்தியில் ரூ.35 லட்சமும் முதல் நாள் வசூலாக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
உளவாளி மற்றும் செம்மரக் கடத்தலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் கதைக்களம், தமிழ்நாடு முதல் துபாய் வரையிலான கடத்தல் வலையமைப்பைச் சுற்றி அமைந்துள்ளது. முதல் நாளிலேயே வசூலில் கவனம் ஈர்த்துள்ள இப்படம், அடுத்தடுத்த நாட்களில் மேலும் சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.




கருத்துகள் (0)