தங்கத்தில் ரீனியம் கலக்கப்படுவதாக பரவும் தகவல் பொய் என நகை வியாபாரிகள் சங்கம் விளக்கம்!

தங்க நகைகளில் ரீனியம் (Rhenium) என்ற வேதிப்பொருள் கலக்கப்படுவதாகவும், இந்த கலப்படத்தை நகைகளை பரிசோதிக்கும் நவீன கருவிகளால் கூட கண்டுபிடிக்க முடியாது என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் தங்கம் வாங்கும் பொதுமக்களிடையே குழப்பமும், நகைகளின் தரம் குறித்த அச்சமும் ஏற்பட்டுள்ளது.
இந்த தகவல் உண்மையல்ல என மெட்ராஸ் வைரம் மற்றும் நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் ஷலானி தெரிவித்துள்ளார். தங்கத்துடன் ரீனியம் என்ற உலோகத்தை கலந்து நகைகள் தயாரிப்பது சாத்தியமில்லை என்றும், இதுபோன்ற தகவல்கள் மக்களிடம் தேவையற்ற அச்சத்தை உருவாக்குவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும், ரீனியம் கலந்த தங்கத்தை பரிசோதனை கருவிகளால் கண்டறிய முடியாது என பரப்பப்படும் செய்திகள் தவறானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் சில வீடியோக்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் என்றும், அவற்றை உண்மையான தகவல்களாக நம்பி பொதுமக்கள் பகிர வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.
தங்கத்தின் தரம் குறித்து தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கவும், நகை வாங்கும் மக்களிடையே தேவையற்ற சந்தேகங்களை ஏற்படுத்தாமல் இருக்கவும் உண்மைத் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.




கருத்துகள் (0)